ஈழத்தமிழர்களை இலங்கையில் கொல்ல, சோனியாவுடன் ஜோடி சேர்ந்த "உலக வாழ் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரான" கருணாநிதி தற்போது தமிழக மக்களின் தார்மீக உரிமையான முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் முரண்பட்டுக் காணப்படுகிறார். அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி என்ற வசனத்தை நினைவு படுத்தும் விதத்தில், டெல்லியில் "அடைந்தால் ஐ.டி துறை, இல்லையேல் வெளியிலிருந்து ஆதரவு" என்று கோபப்பட்ட இந்த தமிழினத் தலைவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இரண்டாவது முறையாக 7 அமைச்சர்களுடன் அங்கம் வகிக்கும் இந்த தமிழினத் தலைவர், அணை விவகாரத்தில் தொடர்ந்து அமைதி காக்கிறார்.
காங்கிரஸ் கூட்டணி ஆளும் மத்திய அரசின் காங்கிரஸ் அமைச்சர் ஒருவரே, காங்கிரஸ் கட்சியின் எதிரியான கம்யுனிஸ்ட் ஆளும் கேரளாவிற்கு அணையில் ஆய்வுப்பணியை துவங்க அனுமதித்திருக்கிறார். பொறுத்தது போதும், பொங்கி எழு என்ற இந்த தமிழினத் தலைவர், தனது அன்பிற்குரிய மகனான அஞ்சாநெஞ்சன் தலைமையில் மதுரையில் அமைச்சருக்கு எதிரான கண்டனக் கூட்டத்திற்கு கடந்த் 21-ந் தேதி அழைப்பு விடுத்தார். அழைப்பு விடுத்த சில தினங்களிலேயே, அமைச்சருக்கு எதிரான கூட்டமோ, மத்திய அரசுக்கு கூட்டமோ எதிரான இது அல்ல, என்று "தெளிவு படுத்திய" இந்த தமிழினத் தலைவர், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கண்டனக் கூட்டத்தையே ரத்து செய்வதாக தற்போது கூறியிருக்கிறார். ஆண்டு ஆண்டு காலமாக முல்லைப் பெரியாறு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலையில், தி.மு.க தலைவருக்கு இது தெரியாமல் எப்படி போனது என்ற கேள்விக்கு விடை தேவையில்லை. காரணம்...
லாலு, முலாயம் சிங் போன்றோரைப் பயமுறுத்த பயன்படும் சி.பி.ஐ என்னும் அஸ்திரத்தை, காங்கிரஸ் இப்போது தி.மு.க பக்கம் திருப்பி விட்டிருக்கிறது. கடந்த காலங்களில் தி.மு.க தயவில் மத்தியில் காலத்தை ஓட்டிய காங்கிரஸ் கட்சி, இப்போது தி.மு.க-விற்கு மாநிலத்தில் தயவளிக்கிறது. பெத்த மனம் பித்து என்பார்கள். தனது அன்பு மகன் அஞ்சாநெஞ்சன் அழகிரி, அமைச்சர் எனும் அதிகாரப்பீடத்தில் அமர்ந்த ஆறு மாதத்திற்குள் அதை இழக்கவும் இந்த தமிழின தலைவர் விரும்பவில்லை. மேலும், மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலை வேறு. ஆளும் கூட்டணியில் அங்கமாக உள்ள போதே, ஸ்பெக்ட்ரம் பூதத்தை கிளப்பி, சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்த காங்கிரஸ், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி, அதிகாரத்தில் இல்லாத போது என்னவெல்லாம் காங்கிரஸ் செய்யுமோ என்ற எண்ணமும் இந்த தமிழின தலைவருக்கு வந்திருக்கலாம்.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை ஒன்றும் முக்கிய பிரச்சனையல்ல. ஏனென்றால், இந்த தமிழினத் தலைவருக்கு நன்கு தெரியும் தமிழக மக்களின் மறதி நோயைப் பற்றி. இலவசம் என்ற ஒன்றைச் சொல்லி இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் எங்களை நீங்கள் ஏமாற்றலாம்.
இந்த தமிழினத் தலைவருக்கு இறுதியாக ஒரு கேள்வி. சேது சமுத்திர திட்டம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த போது தானே, அதை எதிர்த்து பந்த் நடத்தினீர்கள்?