கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, காங்கிரசுக்கு 63 தொகுதிகளை ஒதுக்கி ஒரு வழியாக ராஜினாமா நாடகத்தை முடிவுக்கு வந்திருக்கிறது தி.மு.க. ஏற்கனவே தி.மு.க கூட்டணியில் பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று, தலா 31, 10, 7, 3 மற்றும் 1 என தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், பா.ம.க மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளிக்கு ஒதுக்கிய தொகுதிகளிலிருந்து தலா ஒன்றை பிடுங்கி காங்கிரசுக்கு அளித்திருப்பதன் மூலம் கூட்டணியில் நீடித்த குழப்பத்திற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தி.மு.க.
தி.மு.க உடனான கூட்டணி உடன்பாட்டிற்கு முன்னர் இரு கழகங்களின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி இரண்டு பக்கத்திற்கும் பா.ம.க தூது விட்ட நிலையில், தி.மு.க முந்தியடித்துக் கொண்டு 31 சீட்டுக்களை ஒதுக்கிய இன்ப அதிர்ச்சியில் இன்றளவும் திளைத்திருக்கும் பா.ம.க-விற்கு, ஒரு இடம் பிடுங்கப்பட்டது அதிர்ச்சியை அளிக்காது என்றே தோன்றுகிறது. மாநிலங்களவையில் தனது அன்பு மகனான அன்புமணிக்கு ஒரு இடத்தை உறுதி செய்யும் வரை தி.மு.க உடனான மோதல் போக்கை பா.ம.க மறந்தும் கடைபிடிக்காது என்பது காரணமாகவும், நிதர்சனமான உண்மையாகவும் இருக்கும் அதே சமயத்தில், எட்டு தொகுதிகள் வரை கேட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு, மொத்தம் மூன்று தொகுதிகளே ஒதுக்கப்பட்ட நிலையில், அதிலும் ஒன்றைப் பிடுங்கி காங்கிரசுக்கு கொடுத்திருப்பது, இஸ்லாமிய மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது. மதமாற்ற தடைச் சட்டம் உள்ளிட்டவைகளால் சிறுபான்மை மக்களின் எதிரியாக பார்க்கப்பட்ட ஜெயலலிதாவே, தனது தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனித நேய மக்கள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், சிறுபான்மை காவலராக தன்னை கூறிக் கொள்ளும் கருணாநிதியின் இந்த செயலை இஸ்லாமிய சமுதாய மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது தான் மிகப் பெரிய கேள்விக் குறியாக உள்ளது.
0 comments:
Post a Comment